இலங்கை மத்தியவங்கி

இலங்கை மத்தியவங்கி
மத்தியவங்கியின் நாணயமாற்று வீதங்கள்..

கொழும்பு பங்குச்சந்தை

கொழும்பு பங்குச்சந்தை
கொழும்பு பங்குப்பரிவர்த்தனை நடவடிக்கைகள்..

பம்பாய் பங்குச்சந்தை

பம்பாய் பங்குச்சந்தை
பம்பாய் பங்குச்சந்தை நடவடிக்கைகள்..

தேசிய பங்குச்சந்தை

தேசிய பங்குச்சந்தை
இந்திய தேசிய பங்குச்சந்தை நடவடிக்கைகள்..

`சென்செக்ஸ்' கணக்கிடும் நிறுவனங்களில் அன்னிய பங்கு மூலதனம் அதிகரிப்பு

16 பிப்ரவரி, 2010



நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில்
அன்னிய நிதி நிறுவனங்கள், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிறுவனங்களின் செயல்திறன் மீது நம்பிக்கை வைத்துள்ளன. இதனை வெளிப்படுத்துகின்ற வகையில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் `சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள் 19 நிறுவனங்களில், நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் (அக்டோபர் - டிசம்பர்), அன்னிய நிதி நிறுவனங்கள் கொண்டுள்ள பங்கு மூலதன அளவு அதிகரித்துள்ளது.

ஹிண்டால்கோ

இதற்கு சான்றாக, தாமிரம் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும், ஆதித்ய பிர்லா குழுமத்தைச் சேர்ந்த ஹிண்டால்கோ நிறுவனத்தில் அன்னிய நிதி நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு மேற்கொண்டுள்ளதை கூறலாம். நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில், அன்னிய நிதி நிறுவனங்கள் கொண்டிருந்த பங்கு மூலதன அளவு 16.39 சதவீதமாக இருந்தது. இது, டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில் 8 சதவீதம் அதிகரித்து 24.39 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஹிண்டால்கோ நிறுவனம், தாமிரம் உற்பத்தியில், இந்தியாவில் முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தொழில் துறை நடவடிக்கைகளில் ஏற்பட்டு வரும் விறுவிறுப்பால், உலோகத் துறையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களுக்கு வளமான வர்த்தக வாய்ப்பு உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டார் வாகனங்கள்

நாட்டில் கார்கள் உள்ளிட்ட மோட்டார் வாகனங்கள் விற்பனையில் எழுச்சி ஏற்பட்டு வருகிறது. இதனை உறுதிபடுத்துகின்ற வகையில், சென்ற ஜனவரி மாதத்தில் மோட்டார் வாகனங்கள் விற்பனை 11 லட்சம் எண்ணிக்கையை தாண்டி, இந்திய மோட்டார் வாகனத் துறை வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் உருவாகி உள்ளது. நாட்டில், மோட்டார் வாகனங்கள் தயாரிப்பில் மிகப் பெரிய நிறுவனமாகத் திகழும் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தில் அன்னிய நிதி நிறுவனங்கள் சென்ற செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் 11.25 சதவீத பங்கு மூலதனத்தைக் கொண்டிருந்தன. இது, டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், 15.67 சதவீதமாக உயர்ந்துள்ளது.

வங்கிகள்

இந்தியாவில், வங்கிகள், பாரத ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இதனால்தான் கடந்த 2008-ஆம் ஆண்டில், உலக அளவில், வங்கித் துறையில் கடும் பாதிப்பு ஏற்பட்ட போதும், இந்திய வங்கிகள் நல்ல அளவில் லாபம் ஈட்டி திறம்பட செயல்பட்டன. இந்தியாவில் பொதுத் துறையைச் சேர்ந்த பாரத ஸ்டேட் வங்கி மிகப் பெரிய வங்கியாக திகழ்கிறது. இவ்வங்கியில், அன்னிய நிதி நிறுவனங்கள் கொண்டிருந்த பங்கு மூலதனமும் இதே காலத்தில் 1.5 சதவீதம் உயர்ந்து 11.37 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில், தொழில் துறையில் ஏற்பட்டு வரும் பிரமிக்கத்தக்க வளர்ச்சியால், சென்ற 2009-ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், அன்னிய நிதி நிறுவனங்கள், முக்கிய நிறுவனங்களில் கொண்டுள்ள பங்கு மூலதன அளவை உயர்த்தி உள்ளன என்று சி.என்.ஐ. ரிசர்ச் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கிஷோர் பி.ஆஸ்த்வால் தெரிவித்தார்.

பங்கு வர்த்தகம்

உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட உருக்குலைவால், கடந்த 2008-ஆம் ஆண்டில், நாட்டின் பங்கு வர்த்தகத்தில் கடும் சரிவு ஏற்பட்டது. அவ்வாண்டில், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய நிறுவனப் பங்குகளில் மேற்கொண்ட முதலீட்டிலிருந்து ரூ.52,900 கோடி நிகர மதிப்பிற்கு பங்குகளை விற்பனை செய்தன.

இதன் பிறகு, சென்ற 2009-ஆம் ஆண்டில், நாட்டின் பங்கு வர்த்தகம் மிகவும் நன்றாக இருந்தது. அவ்வாண்டில், கடந்த ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு `சென்செக்ஸ்' ஒரே ஆண்டில் 80 சதவீதம் அதிகரித்து இருந்தது. இவ்வாண்டில், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய நிறுவனப் பங்குகளில் ரூ.80,500 கோடி நிகர மதிப்பிற்கு முதலீடு மேற்கொண்டிருந்தன.

பராக் ஒபாமா

இந்நிலையில், நடப்பு 2010-ஆம் ஆண்டில், இதுவரையிலுமாக, நாட்டின் பங்கு வர்த்தகம் அதிக ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. `சென்செக்ஸ்', இவ்வாண்டில், சென்ற 18 வர்த்தக தினங்களில் 7.51 சதவீதம் சரிவடைந்துள்ளது.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அமெரிக்க வங்கிகளின் முதலீட்டு நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படும் என்று இவ்வாண்டு தொடக்கத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டார். இதனால், அமெரிக்காவிலுள்ள வங்கிகளால் ஈட்டப்படும் லாபம் குறையலாம் என்ற நிலை உருவானது. கிரீஸ், ஸ்பெயின், போர்ச்சுக்கல் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில், கடந்த 19 மாதங்களில் இல்லாத அளவிற்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சீனாவும், அந்நாட்டில் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. இதுபோன்ற வெளிப்புற காரணிகளால், நாட்டின் பங்கு வர்த்தகம் தற்போது மந்தமாக உள்ளது.

முதலீடு

இந்நிலையிலும், கணக்கீடு செய்வதற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 3,000 நிறுவனப் பங்குகளில், நடப்பு ஆண்டில், இதுவரையிலான காலத்தில் 1,370 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்துள்ளது. அதாவது, 100 நிறுவனங்களில், 46 நிறுவனங்களின் பங்குகளின் விலை உயர்ந்துள்ளது. எனவே, வரும் மாதங்களில், இந்திய நிறுவனப் பங்குகளில், அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு அதிகரிக்க வாய்ப்புள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை, அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீட்டில் விறுவிறுப்பு இருக்காது என்று பங்கு வர்த்தக நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.