இலங்கை மத்தியவங்கி

இலங்கை மத்தியவங்கி
மத்தியவங்கியின் நாணயமாற்று வீதங்கள்..

கொழும்பு பங்குச்சந்தை

கொழும்பு பங்குச்சந்தை
கொழும்பு பங்குப்பரிவர்த்தனை நடவடிக்கைகள்..

பம்பாய் பங்குச்சந்தை

பம்பாய் பங்குச்சந்தை
பம்பாய் பங்குச்சந்தை நடவடிக்கைகள்..

தேசிய பங்குச்சந்தை

தேசிய பங்குச்சந்தை
இந்திய தேசிய பங்குச்சந்தை நடவடிக்கைகள்..

மத்திய பட்ஜெட்டும், நிதி பற்றாக்குறையும்... நாமும் தெரிந்து கொள்வோம்

17 பிப்ரவரி, 2010

மத்திய அரசு, அதன் வருவாய் மற்றும் செலவினங்களை ஆய்வு செய்யும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாத இறுதியில், நிதி நிலை அறிக்கையை (பட்ஜெட்) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறது. இவ்வகையில், வரும் 2010-11-ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் இம்மாதம் 26-ந் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், நடப்பு 2009-10-ஆம் நிதி ஆண்டில், நாட்டின் நிதி பற்றாக்குறை, கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சுமார் ரூ.4 லட்சம் கோடியாக மிகவும் அதிகரித்துள்ளது. இது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.8 சதவீதமாகும்.


காரணம்


நாட்டின் நிதி பற்றாக்குறை அதிகரித்துள்ளதற்கு, உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட கடும் பின்னடைவு காரணமாக அமைந்துள்ளது. சென்ற 2008-ஆம் ஆண்டில், சர்வதேச அளவில் ஏற்பட்ட கடும் நிதி நெருக்கடியால், அதற்கு முந்தைய மூன்று நிதி ஆண்டுகளில் 9 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து இருந்த ஜி.டீ.பி. என்று அழைக்கப்படும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அல்லது பொருளாதார வளர்ச்சி, சென்ற 2008-09-ஆம் நிதி ஆண்டில் 7 சதவீதத்திற்கும் கீழ் சென்றது. நாட்டின் ஏற்றுமதியும் சரிவடையத் தொடங்கியது.


சலுகைகள்


இந்த பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் மத்திய அரசு மூன்று முறை மொத்தம் ரூ.2.48 லட்சம் கோடி மதிப்பிற்கு சலுகை திட்டங்களை அளித்தது. உற்பத்தி வரியை 6 சதவீதமும் மற்றும் சேவை வரியை 2 சதவீதமும் குறைத்தது. ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் உள்ளிட்ட சமூக நலத் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது. உணவு, உரம், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றிற்கான மானியச் சுமை உயர்ந்தது. ஆக, செலவினம், உயர்ந்துள்ள நிலையில் வருவாய் குறைந்ததால், நிதி பற்றாக்குறை மிகவும் உயர்ந்துள்ளது.


கடன் அல்லாத இதர வழிமுறைகள் வாயிலாக ஈட்டப்படும் வருவாயைக் காட்டிலும், செலவினம் அதிகரிக்கும்போது நிதி பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்த நிதி பற்றாக்குறையை எதிர்கொள்ள, மத்திய அரசு செலவினத்தை குறைப்பதுடன், வருவாயையும் பெருக்க வேண்டும்.
மத்திய அரசு, எவ்வாறு வருவாய் ஈட்டுகிறது, என்னென்ன செலவினங்களை மேற்கொள்கிறது என்பது குறித்து நாம் தெரிந்து கொள்வோம். நிதி பற்றாக்குறை மற்றும் வருவாய் பற்றாக்குறை என்றால் என்ன, நிதி பற்றாக்குறையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் நாம் தெரிந்து கொள்வது அவசியமாகும்.


மத்திய அரசின் கடன் அல்லாத வருவாய்களில் நேரடி வரி, மறைமுக வரி, மத்திய அரசு பொதுத் துறை நிறுவனங்களில் கொண்டுள்ள பங்கு மூலதனம் மீது கிடைக்கும் டிவிடெண்டு வருவாய், மத்திய அரசு வழங்கியுள்ள கடன்களுக்கு கிடைக்கும் வட்டி வருவாய், பொதுத் துறை நிறுவனங்களில் கொண்டுள்ள பங்கு மூலதனத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை விற்பனை செய்வதன் வாயிலாக ஈட்டப்படும் வருவாய், தொலைத் தொடர்பு அலைவரிசை ஒதுக்கீட்டு ஏலம் வாயிலாக ஈட்டப்படும் வருவாய் போன்றவை அடங்கும்.


நேர்முக வரி


இந்த வரியை யார் மீது விதிக்கப்படுகிறதோ, அவர்தான் இதனைச் செலுத்த வேண்டும். மற்றவர்கள் மீது சுமத்த முடியாது. இதனால், இது நேர்முக வரி என்று அழைக்கப்படுகிறது நேர்முக வரியில், தனிநபர் வருமான வரி, நிறுவன வரி, பங்கு பரிவர்த்தனை வரி ஆகியவை அடங்கும்.


தனிநபர் வருமான வரி


அரசு மற்றும் தனியார் நிறுவனப் பணியாளர்களின் ஆண்டு வருமானம் ரூ.1.60 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால் வருமான வரி விதிக்கப்படுகிறது. மகளிர் மற்றும் மூத்த குடிமக்களுக்கு இந்த உச்சவரம்பு வித்தியாசமாக இருக்கும். இந்நிலையில், நாட்டில் உணவு பொருள்களுக்கான பணவீக்க விகிதம் 18 சதவீதத்தை எட்டி உள்ளது. எனவே, வருமான வரி உச்சவரம்பு இம்மாதம் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.


இது, நிறுவனங்கள் ஈட்டும் லாபத்தின் மீது விதிக்கப்படுகிறது. நிறுவன வரி தற்போது 30 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதனை குறைக்க வேண்டும் என நிறுவனங்கள் விரும்புகின்றன.


பங்கு பரிவர்த்தனை வரி


இது நிறுவனங்களின் பங்குகள், பரஸ்பர நிதி நிறுவனங்களின் ïனிட்டுகள் போன்றவற்றை வாங்கும் போதும், விற்கும் போதும் விதிக்கப்படுகிறது. ஓர் ஆண்டு காலத்திற்கு மேல் வைத்து இருக்கும் நிறுவனப் பங்குகளை விற்பனை செய்யும்போது கிடைக்கும் லாபத்தின் மீது விதிக்கப்பட்டு வந்த நீண்ட கால மூலதன லாப ஈட்டு வரி, கடந்த 2004-05-ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் ரத்து செய்யப்பட்டது. அதற்குப் பதிலாக, அந்த நிதி ஆண்டில், பங்கு பரிவர்த்தனை வரி அறிமுகப்படுத்தப்பட்டது.


இந்த வரியை மற்றவர்கள் மீது சுமத்த முடியும் என்பதால், இது மறைமுக வரி என்று அழைக்கப்படுகிறது. இது, ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி அனைவர் மீதும் ஒரே விதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மறைமுக வரியில் சுங்க வரி (இறக்குமதி வரி), கலால் வரி (உற்பத்தி வரி), சேவை வரி ஆகியவை அடங்கும்.