இலங்கை மத்தியவங்கி

இலங்கை மத்தியவங்கி
மத்தியவங்கியின் நாணயமாற்று வீதங்கள்..

கொழும்பு பங்குச்சந்தை

கொழும்பு பங்குச்சந்தை
கொழும்பு பங்குப்பரிவர்த்தனை நடவடிக்கைகள்..

பம்பாய் பங்குச்சந்தை

பம்பாய் பங்குச்சந்தை
பம்பாய் பங்குச்சந்தை நடவடிக்கைகள்..

தேசிய பங்குச்சந்தை

தேசிய பங்குச்சந்தை
இந்திய தேசிய பங்குச்சந்தை நடவடிக்கைகள்..

ஐரோப்பிய நாடுகளில் தேவைப்பாடு குறைந்ததால் இந்தியாவின் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி 11% குறைந்தது

17 பிப்ரவரி, 2010

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தேவைப்பாடு குறைந்ததால், சென்ற டிசம்பர் மாதத்தில், நாட்டின் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி 11 சதவீதம் சரிவடைந்துள்ளது.

அதாவது, சென்ற 2008-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 97.30 கோடி டாலராக (ரூ.4,476 கோடி) இருந்த இந்த ஏற்றுமதி, 2009-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 86.20 கோடியாக (ரூ.3,965 கோடி) குறைந்துள்ளது. ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி மேம்பாட்டு குழு வெளியிட்டுள்ள புள்ளி விவரம் வாயிலாக இது தெரிய வந்துள்ளது.

கிறிஸ்மஸ்

இது குறித்து இக்குழுவின் தலைவர் பிரமல் உதானி கூறுகையில், "கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு, சென்ற நவம்பர் மாதத்தில், இந்திய ஆயத்த ஆடை நிறுவனங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து அதிக ஆர்டர்கள் கிடைத்தன. இதனையடுத்து, அம்மாதத்தில் இவற்றின் ஏற்றுமதி அதிகரித்து இருந்தது. இந்தியாவின் ஆயத்த ஆடைகளின் மொத்த ஏற்றுமதியில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு மட்டும் 70 சதவீதமாகும். இந்நிலையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து புதிதாக ஆர்டர்கள் எதுவும் கிடைக்காததால், சென்ற டிசம்பர் மாதத்தில் ஏற்றுமதி சரிவடைந்துள்ளது'' என்று தெரிவித்தார்.

இது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், பொருளாதார பின்னடைவு என்ற பிடியிலிருந்து இன்னும் முழுமையாக விடுபடவில்லை என்பதை நமக்கு உணர்த்துகிறது.

ஐரோப்பா

குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளில் கிரீஸ் நாட்டின் நிதி பற்றாக்குறை, அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12.7 சதவீதம் என்ற அளவில் மிகவும் அதிகமாக உள்ளது. மேலும், போர்ச்சுக்கல் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் தற்போது நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. அந்நாடுகளில், தனிநபர் ஆண்டு வருமானம் குறைந்து, பொருள்கள் விற்பனை சரிவடைந்து வருகிறது. இது, நம் நாட்டின் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2007-08-ஆம் நிதி ஆண்டில், நாட்டின் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி நன்றாக இருந்தது. இந்நிலையில், கடந்த 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட உருக்குலைவு உச்சநிலையை அடைந்தது. இதனையடுத்து, அவ்வாண்டு அக்டோபர் மாதத்திலிருந்து நாட்டின் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி சரிவடையத் தொடங்கியது. இருப்பினும், சென்ற 2008-09-ஆம் நிதி ஆண்டில் 1,090 கோடி டாலர் (ரூ.50,140 கோடி) மதிப்பிற்கு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி மேற்கொள்ளப்பட்டது.

பொருளாதார வளர்ச்சி

நடப்பு 2009-10-ஆம் நிதி ஆண்டில் இந்த அளவிற்கு ஏற்றுமதி மேற்கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால், நடப்பு நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி, சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தைக் காட்டிலும் 7.63 சதவீதம் சரிவடைந்து 760 கோடி டாலரிலிருந்து (ரூ.34,960 கோடி) 700 கோடி டாலராக (ரூ.32,200 கோடி)

குறைந்துள்ளது.பொருளாதார வளர்ச்சியை எடுத்துக்காட்டும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியின் பங்களிப்பு மட்டும் சுமார் ஒரு சதவீதம் என்ற அளவில் உள்ளது. எனவே, ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி குறைவது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள் வாயிலாக 35 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 30 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு வழங்கி உள்ளன.