சுனில் மிட்டல் தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் பார்தி ஏர்டெல், செல்போன் சேவையில், வாடிக்கையாளர் எண்ணிக்கை அடிப்படையில், இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமாகத் திகழ்கிறது. ஆப்பிரிக்காவில் செல்போன் சேவைத் துறை அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. எனவே, இந்நிறுவனம், ஆப்பிரிக்காவில் கால் பதிக்க மீண்டும் முயற்சி செய்து வருகிறது.
பேச்சுவார்த்தை
இதனை வெளிப்படுத்துகின்ற வகையில், குவைத் நாட்டைச் சேர்ந்த, தொலை தொடர்புச் சேவையில் ஈடுபட்டு வரும் `சயின்' நிறுவனத்தின் ஆப்பிரிக்க செல்போன் சேவை பிரிவின் பெரும் பகுதியை 1,070 கோடி டாலர் (ரூ.49,700 கோடி) மதிப்பிற்கு வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. இதற்கு `சயின்' நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பார்தி ஏர்டெல் நிறுவனம், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த எம்.டி.என். நிறுவனத்தை கையகப்படுத்த இரண்டு முறை முயற்சி செய்தது. ஆனால், இம்முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், `சயின்' நிறுவனத்தின் ஆப்பிரிக்காவில் உள்ள செல்போன் சேவைப் பிரிவை வாங்கும் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, பார்தி ஏர்டெல் நிறுவனம் ஐந்து நாடுகளில் செயல்பாடுகளை கொண்டுள்ளது. `சயின்' நிறுவனம் 15 நாடுகளில் செயல்பாடுகளை கொண்டுள்ளது. ஆக, `சயின்' நிறுவனத்தை கையகப்படுத்தும் நிலையில், ஏர்டெல் நிறுவனத்தால் 20-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் காலூன்ற முடியும். சயின் நிறுவனத்திற்கு, ஆப்பிரிக்காவில் 4.01 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். எனவே, செல்போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் 16.50 கோடியாக உயர்ந்துவிடும்.
பங்கின் விலை
அதேசமயம், ஆப்பிரிக்க செல்போன் சேவை பிரிவை கையகப்படுத்துவதால், பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் நிதி நிலையில் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, திங்கள்கிழமை அன்று, இந்நிறுவனப் பங்கின் விலை 9.22 சதவீதம், அதாவது ரூ.29 குறைந்து ரூ.285.40-ஆக இருந்தது.
சோழ தலைநகருக்கு வாழ்வளித்த ஏரி - ராஜேந்திர சோழன் கட்டிய பொன்னேரியின் வரலாறு
-
சோழ தலைநகரின் நீர் ஆதாரமாக விளங்கிய ஏரி இன்று கம்மாய் போன்ற நிலையில் உள்ளது.
2 மணிநேரம் முன்பு