இலங்கை மத்தியவங்கி

இலங்கை மத்தியவங்கி
மத்தியவங்கியின் நாணயமாற்று வீதங்கள்..

கொழும்பு பங்குச்சந்தை

கொழும்பு பங்குச்சந்தை
கொழும்பு பங்குப்பரிவர்த்தனை நடவடிக்கைகள்..

பம்பாய் பங்குச்சந்தை

பம்பாய் பங்குச்சந்தை
பம்பாய் பங்குச்சந்தை நடவடிக்கைகள்..

தேசிய பங்குச்சந்தை

தேசிய பங்குச்சந்தை
இந்திய தேசிய பங்குச்சந்தை நடவடிக்கைகள்..

இந்திய மத்திய பட்ஜெட் 2010-11 இவர்கள் என்ன சொல்கிறார்கள்...

28 பிப்ரவரி, 2010

* முகேஷ் அம்பானி, தலைவர், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்: முந்தைய பட்ஜெட்டுகளில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை நிலைநிறுத்திடும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. பொருளாதார வளர்ச்சியில் வேகத்தை ஏற்படுத்தும் வேளாண் துறை, அடிப்படை கட்டமைப்பு வசதி, சமூகநலத் திட்டங்கள், ஊரக மேம்பாடு போன்ற துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், நிதி பற்றாக்குறையை கட்டுக்குள் வைக்கும் வகையிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொருளாதாரத்தில் இரட்டை இலக்க வளர்ச்சி ஏற்படுத்துவதை லட்சியமாகக் கொண்டு மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி இந்த பட்ஜெட்டை தயாரித்துள்ளார்.

பழங்கள், காய்கறிகள் மற்றும் உணவு தானியங்களை பதப்படுத்தும் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இது, விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருபவர்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.

இந்தியாவின் பொருளாதார வலிமையை வெளி உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.

* அசிம் பிரேம்ஜி, தலைவர், விப்ரோ: மத்திய பட்ஜெட்டில், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் உள்ளிட்ட திட்டமிடப்படாத செலவினங்கள் 6 சதவீதம் மட்டுமே அதிகரிக்கும் என்றும், இந்த செலவினம் கட்டுக்குள் வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது சாத்தியப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏனென்றால், உணவு பொருள்களுக்கான பணவீக்க விகிதம் மிகவும் உயர்ந்துள்ளது. எனவே, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி மிகவும் உயர்ந்துவிடும். இதனால், செலவினங்களை கட்டுக்குள் வைத்திருப்பது மத்திய அரசுக்கு ஒரு சவாலாக இருக்கும்.

பட்ஜெட்டில், தொழில் துறை உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சுற்றுப்புறச் சூழல் மாசுபட்டு வருவது உலக அளவில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. சுற்றுப்புறச் சூழலை தூய்மையாக வைத்திருப்பதற்காக தனி நிதியம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மரபுசாரா எரிசக்தி துறைக்கு சென்ற ஆண்டைக் காட்டிலும் 61 சதவீதம் அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

* சுனில் மிட்டல், தலைவர், பார்தி என்டர்பிரைசஸ்: மத்திய பட்ஜெட்டில், பொருளாதார வளர்ச்சிக்காக மத்திய அரசு வழங்கிய ஊக்குவிப்பு சலுகைகளின் ஒரு பகுதி திரும்ப பெறப்பட்டுள்ளது. இது, எதிர்பார்த்த ஒன்றுதான்.

வளர்ச்சி அடைந்த நாடுகள், உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவிலிருந்து இன்னும் முழு அளவில் மீளவில்லை. எனவே, ஏற்றுமதி நிறுவனங்கள் பெறும் கடனுக்காக வழங்கப்பட்டு வரும் வட்டிச் சலுகைகள் திரும்ப பெறப்படவில்லை. சேவை வரியிலும் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

மொத்த திட்டச் செலவில், 37 சதவீதம் சமூகநலப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

* என்.ஆர்.நாராயணமூர்த்தி, தலைமை ஆலோசகர், இன்ஃபோசிஸ் டெக்னாலஜிஸ்: மத்திய அரசின் கடன் சுமையை குறைக்க விரும்புவதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். தேவையற்ற செலவினங்கள் மற்றும் மானியங்கள் கட்டுக்குள் வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திட்டமிடப்படாத செலவுகளுக்காக ஒதுக்கப்படும் நிதி 8.6 சதவீதம் உயரும் நிலையில், அடிப்படை கட்டமைப்பு, சாலை வசதிகள் உள்ளிட்ட திட்டமிட்ட செலவுகளுக்காக ஒதுக்கப்படும் நிதி 15 சதவீதம் உயரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது, பொருளாதார வளர்ச்சிக்கு வலுவூட்டும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையாகும்.

அதேசமயம், உற்பத்தி வரி மற்றும் பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்த்தப்பட்டு இருப்பது பொதுமக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும். இதனால் பணவீக்கம் அதிகரித்து, பாமர மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். ஒரு சில வரிச் சலுகைகளை வழங்கியதற்குப் பதிலாக, உற்பத்தி வரி உயர்வை தவிர்த்து இருக்கலாம்.

* ஓ.பி.பட், தலைவர், பாரத ஸ்டேட் வங்கி: பட்ஜெட்டில், நிதி பற்றாக்குறையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. வரும் 2010-11-ஆம் நிதி ஆண்டில், மத்திய அரசு வெளியில் இருந்து அதிக நிதியை திரட்டாது. இதனால், தேவையை ஈடுகட்டும் வகையில், பணப்புழக்கம் போதிய அளவிற்கு இருக்கும். எனவே, நிறுவனங்களால் திரட்டப்படும் கடனுக்கான வட்டி விகிதம் உயர வாய்ப்பில்லை.

* வேணு ஸ்ரீனிவாசன், பிரசிடெண்ட், இந்திய தொழிலக கூட்டமைப்பு: மத்திய பட்ஜெட்டில், நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச மாற்றுவரி உயர்த்தப்பட்டுள்ளது. இது, நிறுவனங்கள் எதிர்பார்க்காத ஒன்று.

நிறுவன குறைந்தபட்ச மாற்றுவரி தற்போது 15 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது, நேரடி வரிக் கொள்கையின் படி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரிக் கொள்கை அதிகப்படியான வரிச் சலுகைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.

* ரூபா குத்வா, நிர்வாக இயக்குனர், கிரிசில்: மத்திய அரசு பொருளாதார ஊக்குவிப்பு சலுகைகளை படிப்படியாக குறைக்க தொடங்கியுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது தாக்கத்தை ஏற்படுத்தாது. வரும் நிதி ஆண்டில், பொருளாதாரத்தில் 8 சதவீத வளர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது.

தனிநபர் வருமான வரியில் அளிக்கப்பட்டுள்ள சலுகைகளால், தனிநபர் செலவிடும் வருவாய் உயர்ந்து, பொருள்கள் விற்பனை அதிகரிக்கும். இதனால், பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படும்.

* அமீர்கான், நடிகர்: முன்னேற்ற பாதையில் நடைபோடும் இந்தியாவின் பொருளாதாரத் திற்கு கல்வித் துறை ஆணிவேராகத் திகழ்கிறது. இதனை கருத்தில் கொண்டு, வரும் 2010-11-ஆம் நிதி ஆண்டில், கல்வித் துறைக்காக, சென்ற நிதி ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக 15 சதவீத நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது, வளர்ந்து வரும் இளைய சமுதாயத்திற்கு உற்சாகமளிப்பதாக அமைந்துள்ளது.

சிகரெட் போன்ற புகையிலை பொருள்களுக்கு வரி உயர்த்தப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்க அம்சமாகும்.