இலங்கை மத்தியவங்கி

இலங்கை மத்தியவங்கி
மத்தியவங்கியின் நாணயமாற்று வீதங்கள்..

கொழும்பு பங்குச்சந்தை

கொழும்பு பங்குச்சந்தை
கொழும்பு பங்குப்பரிவர்த்தனை நடவடிக்கைகள்..

பம்பாய் பங்குச்சந்தை

பம்பாய் பங்குச்சந்தை
பம்பாய் பங்குச்சந்தை நடவடிக்கைகள்..

தேசிய பங்குச்சந்தை

தேசிய பங்குச்சந்தை
இந்திய தேசிய பங்குச்சந்தை நடவடிக்கைகள்..

தமிழ்நாட்டின் புதிய சட்டசபையின் சிறப்பு அம்சங்கள்

13 மார்ச், 2010


சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய சட்டசபை வளாகத்துக்கு ரூ.450 கோடி செலவிடப்பட்டுள்ளது. 9 லட்சத்து 31 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் திராவிடப் பழமையும், நவீன தொழில் நுட்ப புதுமையும் பின்னிப் பிணைந்த பிரமாண்ட கட்டிடமாக புதிய சட்டசபை வளாகம் மிளிர்கிறது.
 2008-ம் ஆண்டு நவம் பர் மாதம் 12-ந்தேதி புதிய சட்டசபை வளாக கட்டுமான வேலைகள் தொடங்கின. திட்டமிட்ட காலத்துக்குள் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
 புதிய சட்டசபை வளாகம் மொத்தம் 4 வட்டங்கள் கொண்ட கட்டிடங்களாகும்.
 அதில் முதல் மற்றும் இரண்டாம் வட்டத்தின் மேல் தளத்தில் பசுமையான தோட்டம் உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவின் முதல் பசுமை கட்டிடம் என்ற சிறப்பை புதிய சட்டசபை வளாகம் பெறுகிறது.
 முதல் மற்றும் இரண்டாம் வட்டத்தின் வெளிப்புறத்தில் வாகனங்கள் செல்ல வழி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வழி மீது அமைக்கப்படும் கூரையானது புல்வெளி, மற்றும் செடிகள் கொண்டதாக இருக்கும். இதனால் முதல் மற்றும் இரண்டாவது வட்ட கட்டிடம் எப்போதும் பச்சை பசேலன பசுமையாக கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும். கட்டிடத்துக்குள்ளும் பசுமை உணர்வு ஒரு ரம்மியமான சூழ்நிலையை ஏற்படுத்தும்.
கட்டிடத்தில் குறைந்த அளவு மின்சாரத்தில் இயங்கும் மின் விளக்குகள் பொருத்தப்படுகிறது. இது மற்ற கட்டிடங்களுக்கு முன் உதாரணமாக இருக்கும்.
 கட்டிடத்திற்குள் சட்டப் பேரவை 120 அடி விட்டம் கொண்ட வட்ட வடிவமைப்புடன் கட்டப்பட்டுள்ளது. அதன் மீது கட்டப்பட இருக்கும் கூரை 100 அடி உயரம் கொண்ட குவிமுக மாடமாக இருக்கும்.
 சட்டமன்ற கூட்ட அரங்குக்குள் தாராளமாக 300 பேர் அமரலாம்.
 பிளாக் ஏ அதாவது முதல் வட்ட கட்டிடத்தில் இந்த சட்டமன்றம் இயங்கும். இந்த பிளாக் சுமார் 60 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது.
 இந்த “ஏ” பிளாக் கட்டிட வளாகத்துக்குள் சட்டமன்ற கூட்ட அரங்கு தவிர சபாநாயகர் அலுவலகம், சட்டசபை நூலகம், கவர்னர் அலுவலகம், கூட்ட அரங்கு, முதல்- அமைச்சரின் அலுவலகம், முதல்- அமைச்சரின் செயலகம், அமைச்சர்களின் அலுவலகங்கள், தலைமைச் செயலாளர் அலுவலகம் ஆகியவை இருக்கும்.
 இவை தவிர பொதுத்துறை, நிதித்துறை, உள்துறை, சட்டத்துறை உள்பட 6 துறைகளின் அலுவலகங்களும் “ஏ” பிளாக்கில் இயங்கும்.
 கட்டிடம் முழுவதும் திராவிடக் கலாச்சாரம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தரை, தூண்கள், கதவு மேற்புறப் பலகைகள், கட்டிடச் சுவர்கள் என எங்கு பார்த்தாலும் தமிழர்களின் பாரம்பரிய சிறப்பான கோலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
 சக்கர வடிவத்தின் அடிப்படையில் கோல சாஸ்தரம் சேர்க்கப்பட்டு கட்டிடம் எழுப்பப்படும் விதம் கண்டு மேலை நாட்டு கட்டிடக்கலை நிபுணர்களே ஆச்சரியத்தில் மூழ்கிப் போனார்கள்.
 கட்டிடத்தின் உள்பகுதிக்குள் இயற்கையான காற்று வரவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக நமது பாரம்பரிய சிற்பக்கலையான கருங்கல் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 கட்டிடத்தின் வெளிப்பகுதியில் வேதியியல் வண்ணக் கலைவை எதுவும் பூசப்படவில்லை. அதற்கு பதில் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளன. மெருகேற்றப்பட்ட கருங்கல் பலகைகளாலும் சுற்றுச் சுவர் மூடப்பட்டுள்ளது. இது கட்டிடத்துக்கு அழகு தருவதுடன் சுகாதாரத்துக்கும் உறுதியானதாக இருக்கும்.
கட்டிடம் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. கட்டிடத்தின் கழிவு நீர் வீணாகாது. அதை சுத்திகரித்து சட்டசபை வளாக புல்வெளி மற்றும் செடிகளுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
 சட்டசபை வளாகத்தை மக்கள் எப்போது வேண்டுமானாலும் பார்த்து செல்ல வசதிகள் செய்யப்பட வேண்டும் என்று முதல்- அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். அதை கருத்தில் கொண்டு சட்டசபை வளாகத்தில் பப்ளிக் பிளாசா கட்டப்பட்டுள்ளது. இது திறந்த வெளிப்பூங்கா போல இருக்கும்.
சட்டப் பேரவை வளாகத்தில் பப்ளிக் பிளாசாதான் அதிக பரப்பளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடம் என்பதால் அந்த வசதி செய்யப்பட்டுள்ளது.
 பப்ளிக் பிளாசா பகுதியில் கலைச் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிக்கு பொதுமக்கள் வந்து செல்ல போலீஸ் கெடுபிடி இருக்காது. எனவே மக்கள் பப்ளிக் பிளாசாவில் மாலை நேரத்தில் அமர்ந்து சட்டசபை அழகை கண்டு ரசிக்கலாம்.
தமிழ்நாட்டின் தனித்துவம் கொண்ட தன்னிரகற்ற அடையாளச் சின்னமாகப்போகும் இந்த சட்டசபை வளாகத்தில் ஒரு திறந்த வெளி அருங்காட்சியகமும் உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் சட்டசபை வளாகம் சுற்றுலா தலம்போல மாறும்.
சட்டசபை வளாக நுழைவு வாயிலில் 4 செயற்கை நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை 4 வட்ட வடிவக் கட்டிடங்களை அடையாளப்படுத்துகின்றன.
 4 வட்ட வடிவ கட்டிடங்களில் மக்கள் வளாகம் மிகப்பெரியது. எம்.எல்.ஏ.க்கள் அமரும் சட்டமன்ற அரங்கு 2-வது பெரிய கட்டிடமாக உள்ளது. மூன்றாவது இடத்தை நூலக கட்டிடம் பெற்றுள்ளது. இது நீதித்துறையை அடையாளம் காட்டும் வகையில் இருக்கும்.
முதல்வரின் அலுவலகம் உள்ள வட்ட வடிவக் கட்டிடம்தான் 4 பிரிவுகளில் மிகச்சிறியது. நிர்வாகம் மிக எளிமையாக நடைபெற வேண்டும் என்று பொருள்படும் வகையில் இது கட்டப்படுகிறது.
 எனவே சட்டசபை வளாகத்தில் உள்ள 4 பிரிவுகளும் மக்கள், எம்.எல்.ஏ.க்கள், நீதித்துறை, நிர்வாகத்துறை என்ற வரிசையில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இத்தனை சிறப்புகள் உள்ளதால் உலகின் முதல் ஆட்சி மன்ற பசுமைக் கட்டிடம் என்ற சிறப்பை புதிய சட்டசபை வளாகம் பெற்றுள்ளது. மேலும் அமெரிக்க, இந்திய பசுமை கட்டிட கழகங்களின், தங்கதர நிர்ணயச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
புதிய சட்டசபை வளாகத்தில் மறு சுழற்சி முறையில் தண்ணீர் சுத்திகரித்து பயன்படுத்தப்படும். தினமும் 2.55 லட்சம் லிட்டர் தண்ணீர் மறு சுழற்சி மூலம் கிடைக்கும்.



 புதிய சட்டசபை வளாகத்தில் மழை நீர் சேகரிப்பு திட்டப்படி மழைத்தண்ணீர் நிலத்துக்குள் செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது.
 கட்டிடத்தின் சுற்று சுவர்களில் கோலம் வடிவங்கள் செய்யப்பட்டுள்ளதால், அந்த கோல ஓட்டை வழியாக காற்றும், வெளிச்சமும் வந்து செல்லும். இதனால் 60 சதவீத வெப்பம் கட்டிடத்தின் உள்ளே வராது. இது கட்டிடத்தை எப்போதும் குளிச்சியாக வைத்திருக்க உதவும்.
கட்டிடத்தின் கழிவறைகளில் குறைந்த அளவு தண்ணீர் தானியங்கி மூலம் கழிக்கப்படும். ஏதாவது ஒரு அறையில் ஆட்கள் இல்லை என்றால் மின் விளக்குகள், மின் விசிறிகள் தானாக தங்கள் செயல்பாட்டை நிறுத்திக் கொள்ளும். இதனால் மின் சிக்கனம் அதிகமாக இருக்கும்.
பொதுமக்கள் வசதிக்காக உருவாக்கப்படும் பப்ளிக் பிளாசாவில் நிறுவப்படும் மண் சிற்பங்கள் ராஜஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால் புல் வெளிகள், செடி, கொடிகள், நமது தட்ப- வெட்ப நிலைக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்பதற்காக, சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து எடுத்து வரப்பட்டுள்ளன.
சட்டமன்ற அரங்கு முழுவதும் சணலால் தயாரிக்கப்பட்ட தரை விரிப்புகள் போடப்பட்டுள்ளன. இது அழகு தருவதோடு சுகாதாரத்துக்கும் ஏற்றது.
கட்டிடத்தின் உட்புறங்களில் கண்கவர் வகையில் டெரகோட்டா மூலம் உள் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. அதில் திருவாரூர் தேர் நிச்சயம் எல்லாரையும் கவரும்.
புதிய சட்டசபை வளாகத்துக்காக தனி மின் நிலையம் ஒன்றை மின் வாரியம் அமைத்து கொடுத்துள்ளது. இது 6 கிரவுண்ட் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.
 புதிய சட்டமன்ற அரங்குக்கான அனைத்து இருக்கைகளையும் டான்சி நிறுவனம் தயாரித்து கொடுத்துள்ளது.
 பழைய சட்டசபையில் உள்ள சபாநாயகர் இருக்கை பாரம்பரிய சிறப்பு கொண்டதாகும். எனவே அதன் பெருமையை நீட்டிக்க செய்யும் வகையில் அதே போன்ற தோற்றத்தில் சபாநாயகரின் புதிய இருக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
புதிய சட்டசபை வளாகத்தின் உயரம் 100 அடி. இதற்காக சுமார் 50 லட்சம் செங்கல் பயன்படுத்தப்பட்டுள்ளது. 48 ஆயிரம் சதுர மீட்டர் அளவுக்கு கிரானைட் கற்கள் பொருத்தப்பட்டுள்ளன. 18 ஆயிரம் சதுர மீட்டர் அளவுக்கு மார்பிள் கற்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மொத்தம் ஒரு கோடியே 12 லட்சம் மனித உழைப்பு மணி நேரம், கட்டிட உருவாக்கலுக்கு செலவழிக்கப்பட்டுள்ளது.கட்டிட வளாகம் முழுவதிலும் கட்டுமான பணிகள் முடிந்த பிறகு நூற்றுக்கணக்கான மரங்களை நட்டு வளர்க்க தோட்டக்கலைத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
கட்டிடம் கட்டும்போது கிடைத்த கழிவுகளைக் கொண்டே புதிய சட்டசபை வளாகத்தின் சுற்றுப் புற தரைத்தளம் சமன் செய்யப்பட்டுள்ளது.
பாட்டரி கார்கள் வசதிக்காக சட்டசபை வளாகத்தில் 21 இடங்களில் பாட்டரி ரீ-சார்ஜ் வசதி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்த சட்டசபை வளாகத்தில் எல்லா நவீன வசதிகளும் ஒருங்கே அமைந்துள்ளன.
15 மாதங்களில் கட்டி முடிக்க வேண்டும் என்று திட்டமிருந்தனர். தற்போது 18 மாதங்களில் பணிகள் நிறைவடைந்துள்ளன. முதல்- அமைச்சர் கருணாநிதி தினம், தினம் கட்டிடப் பணிகளை பார்வையிட்டு கட்டிடத்தின் ஒவ்வொரு அங்குல வளர்ச்சியிலும் தனிக்கவனம் செலுத்தினார். ஒரு சிற்பியைப் போல அவர் இந்த கட்டிடத்துக்காக அல்லும் பகலும் அயர்வில்லாமல் பணியாற்றினார்.
முதல்- அமைச்சர் கருணாநிதியின் கை வண்ணத்தில் தமிழ்நாடு முழுவதும் எத்தனையோ கலைக்கூடங்கள், நினைவு சின்னங்கள், நெஞ்சையள்ளும் சிலைகள், சிற்பங்கள் உள்ளன.
ஆனால் புதிய சட்டசபை கட்டிடம் முதல்- அமைச்சர் கருணாநிதியின் பெரும்புகழ் எனும் பொன் மகுடத்தில் வைரக்கல்லாக என்றென்றும் ஒளிவீசும்


.