இலங்கை மத்தியவங்கி

இலங்கை மத்தியவங்கி
மத்தியவங்கியின் நாணயமாற்று வீதங்கள்..

கொழும்பு பங்குச்சந்தை

கொழும்பு பங்குச்சந்தை
கொழும்பு பங்குப்பரிவர்த்தனை நடவடிக்கைகள்..

பம்பாய் பங்குச்சந்தை

பம்பாய் பங்குச்சந்தை
பம்பாய் பங்குச்சந்தை நடவடிக்கைகள்..

தேசிய பங்குச்சந்தை

தேசிய பங்குச்சந்தை
இந்திய தேசிய பங்குச்சந்தை நடவடிக்கைகள்..

கொங்கொங் அன்ட் சங்காய் பாங்கிங் கோப்பரேசன் லிமிடெட்டின் யாழ்ப்பாண அலுவலகம் திறக்கப்பட்ட நிகழ்வில் மத்திய வங்கியின் ஆளுநர் திரு. அஜித் நிவாட் கப்ரால் அவர்களினால் ஆற்றப்பட்ட உரை

16 பிப்ரவரி, 2010

என் அன்பிற்குரிய நண்பர்களே,
எச்எஸ்பீசி வங்கியின் புதிய கிளையைத் திறப்பதற்காக இன்று நான் யாழ்ப்பாணத்தில்
இருப்பதையிட்டு பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். இவ் வங்கி உலகளாவிய வங்கித்தொழில்
சந்தையில் முன்னணியில் உள்ள ஒரு வங்கியாகும். எச்எஸ்பீசி வங்கி 1884இல் கொழும்பில்
அதன் தொழிற்பாட்டினைத் தொடங்கியதிலிருந்து வரலாற்றில் அதன் தடம்
பதிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் தொழிற்படுகின்ற மிகப் பெரிய வெளிநாட்டு வங்கியொன்று
யாழ்ப்பாணத்திற்கு நகர்ந்திருப்பதானது வட மாகாண மக்களின் வாசலுக்கு வங்கித்தொழிலை
கொண்டு வர உதவியிருக்கிறது. இது உண்மையில் ஒரு வரலாற்று மைல்கல்லாகும்.
இவ் அபிவிருத்திகள் அதிர்~;டவசமாக நிகழ்ந்ததொன்றல்ல, இவை தாமாகவே
இடம்பெற்றவையுமல்ல. கடந்த ஆண்டு மே மாதம் எமது முழு நாடும் விடுவிக்கப்பட்டதுடன்
அரசாங்கமும் மத்திய வங்கியும் நிதியியல் பணிகள், வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கும்
பொருளாதாரச் செயற்பாடுகளைத் தூண்டுவதற்கும் வடக்கு மற்றும் கிழக்கில் உட்கட்டமைப்பை
அபிவிருத்தி செய்வதற்கும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளன. உண்மையில் கடந்த
சில மாதங்களாக, பல்வேறு வங்கிக் கிளைகளைத் திறப்பதில் நான் நேரடியாகப்
பங்கேற்றிருப்பதுடன் எமது அலுவலர்கள் இம் முன்னேற்றங்களை தொடர்ந்து கவனித்து
வந்தமையின் இணைந்த விளைவாக நாம் இப் பெறுபேறுகளை அடைய முடிந்தது. என்றும்
வளர்ச்சியடைந்து வருகின்ற பெரும் எண்ணிக்கையான நிதியியல் நிறுவனங்கள் வட பகுதியில்
தொழிற்படுவதன் மூலம் பன்முகப்படுத்தப்பட்ட நிதியியல் சேவைகள் வழங்கப்பட்டு வருவதனை
நான் பெருமையாகக் குறிப்பிடுகின்ற வேளையில், இன்னும் கூடுதலானவற்றை மேற்கொள்ள
வேண்டியிருப்பதனையும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறோம்.
எனது அன்பிற்குரிய நண்பர்களே, வலுவான பொருளாதார வளர்ச்சிக்கும் வறுமைக்
குறைப்பிற்கும் இன்றியமையாத உட்கட்டமைப்புக்களை அபிவிருத்தி செய்து பராமரிப்பது மிக
முக்கியமானதொரு அம்சமாகவுள்ளது. குறிப்பாக, சுகாதாரம், கல்வி, மின்வலு, வீடமைப்பு,
வினைத்திறன்மிக்க நீர் மற்றும் சுகாதாரப் பணிகள், உற்பத்தியாக்கமும் ஆரோக்கியமும்
மிக்கதான மக்கள் தொகைக்கு அடித்தளமிடுவதற்கு உதவுவதன் மூலம் வலுவான
பொருளாதார வளர்ச்சிக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் பங்களிக்கும். இரத்தம் சிந்தப்பட்ட
நீண்ட போர் நடவடிக்கைகளின் காரணமாக, வடக்கின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றைய
மாகாணங்களைப் போன்று அபிவிருத்தி செய்யப்பட்டிருக்கவில்லை என்பதனை நாம் எல்லோரும்
அறிவோம். இதன் காரணமாக வட பகுதியில் அபிவிருத்திகளை விரைவாக மேற்கொள்ளும்
பொருட்டு அரசாங்கம் “வடக்கின் வசந்தம்” என்ற மகுடத்தில் நன்கு திட்டமிடப்பட்டதும்
2
ஒருங்கிணைக்கப்பட்டதும் விரைவுபடுத்தப்பட்டதுமான நிகழ்ச்சித்திட்டமொன்றினை ஏற்கனவே
ஆரம்பித்திருக்கிறது. இந் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், புனர்நிர்மாண அபிவிருத்தி
நடவடிக்கைகளுக்காக அடுத்த 3 ஆண்டு காலப்பகுதியில் ஏறத்தாழ ரூ.295 பில்லியன்
(ஐ.அ.டொலர் 2.7 பில்லியன்) செலவிடுவதற்கு ஒதுக்கியிருக்கிறது. இந் நிகழ்ச்சித்திட்டம்
வீதிகள் மற்றும் போக்குவரத்து உட்கட்டமைப்புக்களின் புனர்நிர்மாணம், வீடுகள் மற்றும்
கைத்தொழில்களுக்கான மின்வலு வசதிகள், நீர் வழங்கல், வேளாண்மை, நீர்ப்பாசன
உட்கட்டமைப்பு மற்றும் தயாரிப்புக் கட்டமைப்பு போன்றவற்றின் தரத்தினை மேம்படுத்தும் என
எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கம் சிறப்பு வறுமை ஒழிப்புத்திட்டங்களை மேற்கொள்ளவும்
தேவையான சமூகப் பாதுகாப்பு வலையமைப்பினை விரைந்து ஏற்படுத்தவும் எண்ணியிருக்கிறது.
எனது அன்பிற்குரிய நண்பர்களே, நாமறிந்தவாறே உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்
குடியமர்த்துவது அரசாங்கத்தின் உயர்ந்த முன்னுரிமையாக இருந்து வருகிறது. இவ்விலக்கினை
அடையும் பொருட்டு பல்வேறு அசாதாரண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மீட்கப்பட்டு
தற்காலிகமாக நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்ட 300,000 இற்கு மேற்பட்ட
உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களில் 217,000 பேர் அல்லது 72 சதவீதத்தினர் ஏற்கனவே
மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். வவுனியா, மன்னார், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த
பெரும்பான்மையான மக்கள், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களின் ஒரு பகுதியைச்
சேர்ந்த மக்களும் தற்பொழுது தமது வீடுகளுக்கு திரும்பிவிட்டனர். முல்லைத்தீவு,
கிளிநொச்சியைச் சேர்ந்த எஞ்சிய மக்கள், கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கைகளின்
அடிப்படையில், தாமதமின்றி ஒழுங்கானதொரு முறையில் குடியமர்த்தப்படுவர். அனைத்து
சச்சரவான விடயங்களுக்கிடையிலும் இது மிகச் சிறந்ததொரு சாதனையாகும். இச்
சாதனையானது அசாதாரணமான ஒன்று என்பதுடன் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட இம்
மீள்குடியமர்த்தலானது அரசாங்கத்தின் கடப்பாட்டிற்கும் எமது அரச பணிகளின் பெரும்
முயற்சிகளுக்கும் பல்வேறு சர்வதேச அமைப்புக்களின் அர்ப்பணிப்புமிக்க பணிகளுக்கும்
கிடைத்த பெருமை என்றே நான் நம்புகின்றேன். இச் சவால்மிக்க பணியினை மேற்கொள்வதற்கு
அரசாங்கத்திற்கு ஆர்வமோ அல்லது அவசரமோ இருக்கவில்லை என தமது உணர்வுகளை
வெளிக்காட்டியவர்களுக்கு இத்தகைய சிறந்த பெறுபேறானது அதிர்ச்சியுடன் கூடிய
மகிழ்ச்சியினை ஏற்படுத்தியிருக்கும் என்பதனை தெரிவிக்க நான் ஆர்வமுடையவனாக
உள்ளேன்.
என் அன்பிற்குரிய நண்பர்களே, மத்திய வங்கியும் இந்த நிலைமையினை வழமைக்குக்
கொண்டு வரும் செயற்பாடுகளில் சிறிய பங்களிப்பொன்றினை வழங்கியிருக்கிறது. கடந்த 8
மாதங்களிலிருந்து இதுவரை நாம் வட பகுதியில் 90 இற்கும் மேற்பட்ட வங்கித்தொழில்
நிலையங்களை நிறுவுவதற்கு ஒப்புதல்களை வழங்கியிருக்கிறோம். நாங்கள், வட மாகாண
மக்களின் வாழ்வாதார அபிவிருத்திகளுக்கு உத்வேகமளிக்கும் விதத்தில் “வடக்கின் வசந்தம்”
என்ற மகுடத்தின் கீழ் சிறப்புக் கடன் திட்டங்களையும் அறிமுகப்படுத்தியிருக்கின்றோம். இத்
திட்டத்தின் கீழ், பங்கேற்கின்ற நிதியியல் நிறுவனங்களினூடாக தகுதி வாய்ந்த நுண்பாக,
சிறிய மற்றும் நடுத்தர அளவு தொழில் முயற்சிகளுக்கு 9 சதவீதமான சலுகை வட்டி
வீதத்தில், மொத்த கடன் திட்டங்களின் கீழ், தொடக்கத்தில் ரூ.3,000 மில்லியன் கொண்ட
தொகையினைப் பகிர்ந்தளிப்பதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. மீள்கொடுப்பனவுக் காலம் 6 மாத
சலுகைக் காலத்துடன் 5 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டிருக்கிறது. இப் பங்கேற்கும் நிதியியல்
3
நிறுவனங்களுடன் ரூ.1.8 பில்லியன் தொகை கொண்ட 9000 கடன்கள் ஏற்கனவே பதிவு
செய்யப்பட்டிருப்பதுடன் ரூ. 1 பில்லியனுக்கும் கூடுதலான கடன்களை வழங்கும் வேலைகள்
விரைந்த வேகத்தில் இடம்பெற்று வருகின்றன.
என் அன்பிற்குரிய நண்பர்களே காடுகள், வேளாண்மை நிலங்கள், சதுப்பு நிலங்கள், கடல்
நீரேரிகள் மற்றும் குடாக்கள் என்பனவற்றை உள்ளடக்கும் வட மாகாணத்தின் வளம்மிக்க
மூலவளங்கள் பல்வேறு தொழில் முயற்சிகளுக்கும் உறுதியான தளமொன்றினை
வழங்குகின்றது. மோதல் நிலவிய காலத்திலும் கூட, 10 சதவீதமான நெல் உற்பத்தியினை
இப்பகுதி விளைவித்திருக்கிறது. 40 சதவீதமான வெங்காயத்தினையும் 10 சதவீதமான
மிளகாயினையும் 14 சதவீதமான பயறினையும் 25 சதவீதமான நிலக்கடலையையும் உற்பத்தி
செய்திருக்கிறது. இப் புள்ளிவிபரங்கள் வங்கித்தொழில் துறையினரின் உதவியுடன்
ஆற்றல்வாய்ந்த வருமான உருவாக்கத்தினை மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் இங்கு
காணப்படுவதனை எடுத்துக்காட்டுகிறது. வட மாகாணத்தில் 219 மீன்பிடிக் கிராமங்களில் 129,000
மீன்பிடியாளர்கள் வாழ்வதாக மதிப்பிடப்பட்டிருக்கின்றது. இது நாட்டின் மொத்த
மீன்பிடியாளர்களில் 20 சதவீதத்தினை பிரசன்னப்படுத்துகிறது. வட மாகாணத்தின் மொத்த
மீன் உற்பத்தி 25,900 மெற்றிக் தொன்களாக விளங்கி, 2006ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த
மீன்பிடியில் 12 சதவீதத்தினைக் கொண்டிருந்தது. வட மாகாணத்தில் சாத்தியமான ஆற்றல்
கொண்ட கடன்பாட்டாளர்களுக்கு வங்கித்தொழில் வசதிகளை, குறிப்பாக, பல நாள் தங்கி
தொழில் செய்யக்கூடிய படகுகள், மீன்பிடி உபகரணங்கள் மற்றும் ஐஸ்கட்டி தயாரிக்கும்
பொறிகள் மற்றும் களஞ்சியப்படுத்தல் வசதிகள் என்பனவற்றிற்கு வழங்குவதன் மூலம்
மீன்பிடித்துறையின் வருமான உருவாக்க நடவடிக்கைகளை கரையோர பிரதேசங்களில்
கணிசமானளவிற்கு அபிவிருத்தி செய்து கொள்ள முடியும்.
கடந்த பல ஆண்டுகளாக, பிரதேச அபிவிருத்தியை மேம்படுத்துவதனையும் வறுமை
ஒழிப்பினையும் நோக்காகக் கொண்ட பல்வேறு கொடுகடன் திட்டங்களை மத்திய வங்கி
ஆரம்பித்திருக்கின்றது. குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை உள்ளடக்கும்
விதத்தில் புதிய வறுமை ஒழிப்பு நுண்பாக நிதிச் செயற்றிட்டத்தின் மீதான வேலைகள்
ஏற்கனவே தொடங்கிவிட்டன. ஏறத்தாழ இச் செயற்றிட்டத்தின் கீழ் யாழ்ப்பாண தீபகற்பத்தில்
12,000 இற்கும் மேற்பட்ட குறைந்த வருமானங்களைக் கொண்ட குடும்பங்களை உள்ளடக்கிய
ஏறத்தாழ 3,000 பயனாளிகள் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இம் மாகாணத்திற்கு
நன்மையளிக்கக்கூடிய இன்னொரு திட்டமான வேளாண் - விலங்கு வளர்ப்பு அபிவிருத்திக்
கடன் திட்டத்தினையும் நாம் விரைந்து நடைமுறைப்படுத்தி வருகின்றோம். இம் மாகாணத்திற்கு
அளப்பரிய நன்மைகளை அளிக்கக்கூடிய இன்னொரு திட்டம் இதுவாகும்.
அன்பிற்குரிய நண்பர்களே நான் யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் விஜயம் செய்த பல்வேறு
தடவைகளிலும் வர்த்தக சம்மேளனம், வங்கியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கிராமிய
மக்கள், மீன்பிடியாளர்கள் மற்றும் பல்வேறுபட்டவர்களையும் நான் சந்தித்து பல
விடயங்களையும் கலந்துரையாடியுள்ளேன். நாங்கள் அவர்களிடமிருந்து பெறுமதிக்க
யோசனைகளையும் பெற்றிருக்கிறோம். குறிப்பாக வட மாகாணத்தில் மத்திய வங்கியின்
மாகாண அலுவலகத்தினையும் வட பகுதிக்காக சிறப்பு பிரதேச அபிவிருத்தி நிதியம்
ஒன்றையும் ஒழுங்கு செய்யுமாறு எமக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை பயன்மிக்கதாகும்.
4
அத்தகைய இவ்விரண்டு கோரிக்கைகளையும் இனிவரும் மாதங்களில் நடைமுறைப்படுத்துவோம்
என்பதனை இன்று அறிவித்துக் கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்.
என் அன்பிற்குரிய நண்பர்களே, உலகின் பல்வேறு பகுதிகளிலும் வதியும் தமிழர்கள் வடக்கின்
அபிவிருத்தி செயற்பாடுகளில் தீவிரமான பங்கேற்பாளர்களாக தொழிற்பட வேண்டுமென
அழைப்பு விடுப்பதற்கு இச் சந்தர்ப்பம் மிகப் பொருத்தமானது என நினைக்கின்றேன். பல்வேறு
வழிகளிலும் எமது சக்தியை உறிஞ்சிய தசாப்தங்களாக நீண்ட மோதல்களை நாங்கள்
கடந்துவிட்டோம். எம் தேசத்தினைக் கட்டியேழுப்புவதற்கு, குறிப்பாக, பாதிக்கப்பட்ட
பிரதேசங்களைக் கட்டியெழுப்ப இதுவே நேரம். வட பகுதி மக்களின் வழமையான வாழ்வினை
சாத்தியமானளவிற்கு விரைவாக மீட்டுக் கொள்வதற்கு நாம் மிகுந்த ஆர்வமுடையவர்களாக
உள்ளோம். இப் பெறுபேறினை அடைவதற்கு உலகின் பல்வேறு பகுதிகளிலும் வதியும்
இலங்கையர்கள் தீவிரமான பங்கினை ஆற்ற முடியும் எனவும் வடக்கின் அபிவிருத்தியில்
பங்கேற்பாளர்களாக மாறமுடியும் எனவும் நாம் நம்புகிறோம். அவர்கள் இப் பிரதேசங்களில்
முதலீடுகளை விரைவுபடுத்துவதில் முக்கியமானதும் செல்வாக்குமிக்கதுமான பங்கினை
ஆற்றமுடியுமாகையால் இதன் மூலம் கைத்தொழில்களை விரிவுபடுத்தவும் சுற்றுலாவினை
உத்வேகப்படுத்தவும் அவர்கள் உதவு முடியும். வடக்கின் பொருளாதார வாய்ப்புக்கள் நாளுக்கு
நாள் விரிவடைந்து வருகின்றமையினால் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் பல்வேறு
துறைகளிலும் குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் உண்மைச் சொத்து அபிவிருத்தி என்பன
பற்றிய வளர்ந்து வரும் இத் துறைகளில் முதலீட்டு வாய்ப்புக்களில் நேர காலத்துடன் கவனம்
செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
வெளிநாட்டிலுள்ள இலங்கைச் சமூகத்தினருக்கும் எமது உள்@ர் நிறுவனங்கள் மற்றும்
வர்த்தகங்களிடையே இரு வழிச் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கான காத்திரமானதொரு
வழியை ஏற்படுத்தக்கூடிய வெளிநாட்டிலுள்ள இலங்கை சமூகத்தினரின் கூட்டமைப்பு
ஒன்றிற்கான நிறுவன ரீதியான கட்டமைப்பினை உருவாக்குவது பற்றி பரிசீலிக்குமாறு வர்த்தக
சம்மேளனத்தினையும் கைத்தொழில் சங்கத்தினையும் ஏனைய நிறுவனங்களையும் கேட்டுக்
கொள்ள விரும்புகிறேன். அத்தகைய உறவு முறை உள்நாட்டுப் பொருளாதாரத்திற்குள்
பணவனுப்பல்களையும் முதலீடுகளையும் ஊக்குவிக்கின்ற ஒரு குவிவு மையமாக செயற்படும்.
எனது அன்பிற்குரிய நண்பர்களே, இன்று, எமது பொருளாதாரம் மற்றும் அரசியல்
தோற்றப்பாடுகளின் குறிப்பிடத்தக்க மாற்றமொன்றிற்கிடையில் நாம் சந்திக்கின்றோம். நீண்ட
தசாப்தங்களாகக் காணப்பட்ட மோதல்கள் முடிவடைந்தமையானது, குறிப்பிடத்தக்க சாதகமான
தாக்கங்களை இம் மாகாணங்களில் மட்டுமன்றி முழு நாட்டிலும் தோற்றுவித்திருக்கின்றது. இச்
சாதகமான தோற்றப்பாடுகளின் மூலம் நன்மையடைந்து கொள்வதற்கு நாம் புதிய
வியாபாரங்களை ஆரம்பிப்பதும் தற்போதுள்ள தொழில் முயற்சிகளை விரிவாக்குவதும் மிக
இன்றியமையாததாகும். இது விடயமாக “உலகின் உள்@ர் வங்கி” என்று தன்னைத்தானே
அடையாளப்படுத்திக் கொண்டுள்ள கொங்கொங் வங்கியினால் கம்பனி மற்றும் சிறு
வாடிக்கையாளர்களுக்கு முழு அளவிலான நிதியியல் சாதனங்களையும் பணிகளையும் வழங்க
முடியும் என்பதனை கவனிக்கும் பொழுது எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வாறான
நடவடிக்கையின் போது வளர்ந்து வரும் இப் பகுதிகளில் இவர்களும், அதே போன்று
வியாபாரங்களை மேற்கொண்டு வரும் மற்றைய அனைத்து வங்கிகளும் நீண்ட கொடுகடன்
5
வரலாற்றினையும் போதுமான பிணையங்களையும் கொண்டிராத கடன்பாட்டாளர்களின்
சவால்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும். இந் நிலைமை நிச்சயமாக சவால்களை
தோற்றுவிக்கும். எனினும், நாம் புத்தம் புதிய முறையிலமைந்த காசுப்பாய்ச்சலை
அடிப்படையாகக் கொண்ட கடன் வழங்கல் முறைகளை குறைந்தது 2 இலிருந்து 3
வருடங்களுக்காவது அவர்கள் செயற்படுத்த வேண்டுமெனவும் பிணையங்களை அடிப்படையாகக்
கொண்ட கடன் வழங்கலை மாத்திரம் வற்புறுத்த வேண்டாமெனவும் ஆலோசனை
வழங்குகின்றோம். இப் பிரதேசத்திலிருந்து திரட்டிய பணத்தினை இப் பிரதேசத்தின்
அபிவிருத்திக்கான கடனாக வழங்குமாறு நான் நிதியியல் நிறுவனங்களைக் கேட்டுக்
கொள்கிறேன்.
இறுதியாக, யாழ்ப்பாணத்தில் முதலாவது வெளிநாட்டு வங்கிக் கிளையினை திறக்கின்ற இந்த
சுபவேளையில் கொங்கொங் வங்கியை வாழ்த்துகின்றேன். இத் திறப்பு விழாவில் கலந்து
கொண்ட ஐக்கிய இராச்சியத்தின் உயர் ஸ்தானிகர் முனைவர் பீற்ற ஹேஸ் அவர்களுக்கு
எமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இம் முயற்சிகள் தொடர்பாக, எச்எஸ்பீசி
வங்கி அதன் உலகளாவிய தொடர்புகளின் மூலம் உலகின் மற்றைய நாடுகளுக்கும்
வடக்கிற்குமிடையிலான நிதியியல் கொடுக்கல்வாங்கல்களுக்கு வசதியளிக்கும ; அதேவேளை
யாழ்ப்பாண தீபகற்பத்தில் எச்எஸ்பீசி வங்கியின் பிரசன்னமானது இன்றிலிருந்து போருக்குப்
பின்னைய இலங்கையின் யதார்த்த பூர்வமான முன்னேற்றத்தினை உலகிற்கு காட்டுவதான
சமிக்ஞையினை விடுப்பதொன்றாக இருக்கும். இம் முயற்சிக்குக் கிடைத்த இவ் ஆதரவு இங்கு
யாழ்ப்பாணத்திலும் இலங்கையின் வேறு எந்தப் பகுதியிலுமுள்ள வியாபார சமூகத்தினருக்கு
நிச்சயமாக உற்சாகத்தினை வழங்கியிருக்கும். தங்களின் உணர்வுகளுக்கு எனது நன்றிகள்.
திரு. நிக். ஏ. நிக்கலாஸ் மற்றும் அவரின் எச்எஸ்பீசி குழுவினருக்கும் அவர்களது அனைத்து
வாடிக்கையாளர்களும், குறிப்பாக, இப் பிரதேசத்திலுள்ளவர்களும் அனைத்து வெற்றிகளையும்
பெறவும் பிரார்த்திக்கின்றேன்.